Monday, November 16, 2009

காலம் மாறினாலும் காயம் ஆறவில்லை.

முஸ்லிம்கள் யாழ்ப்பாணம் வந்துள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் தமது மன அவசங்களையும் தேவைகளையும் அவர்களில் சிலர் இங்கு வெளிப்படுத்துகிறார்கள்.
எப்போதுமே வளங்கொழிக்கும் பூமி யாகத் திகழ்வது யாழ்ப்பாணம். இங்கு காலங்காலமாகத் தமிழ் மக்களோடிணைந்து முஸ்லிம் மக்களும் வாழ்ந் திருந்தனர். ஆயினும் 1990 களில் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களும் குடாநாட்டில் இருந்து வெளியேற வேண்டிய துன்பியல் சூழல் ஒன்று ஏற்பட்டது. 19 வருட காலம் அகதியாக அலைந்த இவர் கள் இப்போது மீளவும் குடியமர யாழ்ப்பாணம் வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆயினும் இங்கு அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. தாம் எதிர்கொள்ளும் இடர்களையும் தமது மன அவசங்களையும் தேவைகளையும் அவர்களில் சிலர் இங்கு வெளிப்படுத்துகிறார்கள்.

முகமது ஜின்னா

நான் 1986ஆம் ஆண்டில் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை நவீன சந்தைப் பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வந்தேன். அதன் பின்னர் முஸ்லிம் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட போது நானும் இடம் பெயர்ந்து புத்தளத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தேன். நான் தையல் கடை வைத்திருந்த காலப்பகுதியில் எனது கடையில் ஏறக்குறைய 13 தொழிலாளிகள் பணிபுரிந்தார்கள். இப்போது போர் முடிந்த பின்னர் நிலைமைகள் சுமூகமாக இருப்பதை அறிந்து மீண்டும் யாழ்ப்பாணம் வந்துள்ளேன். பழைய படி என்னுடைய தையல் கடையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஒரே ஒரு குறிக்கோளாக இருக்கின்றது. ஆனால் எனக்கு வாழ்வழித்த அந்தக் கடை போரின் உக்கிரத்தால் இப்போது உடைந்து போய் சிதைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

வேறு ஏதாவது கட்டடத்தில் எனது தையல் கடையை தொடங்குவோம் என்று நினைத்தால் கூட அதுவும் சாத்தியமாகாத ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் இப்போதெல்லாம் கடைகளின் வாடகையும், அவற்றுக்கான முற்பணமும் மிகமிக அதிகரித்து விட்டன. 5 லட்சம் ரூபா வரை முற்பணமும் 5000 ரூபா வாடகையும் கேட்கிறார்கள். 15 வருடங்களுக்கு மேலாக அகதிகளாக இருந்த எங்களிடம் அவ்வளவு பணம் எப்படி இருக்கும். ஆயினும் எப்படியாவது கஷ்டப்பட்டு கடையை ஆரம்பித்து விட்டால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கை என்னிடம் இப்போதும் உண்டு. ஆனால் அதற்கு யாராவது உதவி செய்தால் தான் முடியும் போலிருக்கின்றது. ஆனால் அவ்வாறான உதவிகளுக்கு யாரை அணுகுவதென்று தெரியாமல் இருக்கின்றது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் எமக்கும் ஏதாவது நிதியுதவி என்பது கூடத் தெரியவில்லை. எனினும் இங்கு ஏற்கனவே குடியேறியுள்ள எமது சமூகத்தை சார்ந்தவர்களிடம் இது பற்றி அறியலாம் என எண்ணுகின்றேன். இடம்பெயர்வதற்கு முன்னர் நான் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அண்மையில் தங்கியிருந்தேன். இப்போது தங்குவதற்கு வீடு இல்லை. ஆகவே அதற்குரிய வசதிகளும் எனக்கு தேவைப்படவே செய்கின்றன. என்னுடைய குறைகளை உரியவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக்கையோடு இன்னமும் காத்திருக்கிறேன்.

றிஸ்லின் பர்ஸானா பேகம் (காதி அபூபக்கர் வீதி)

எனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். நாங்கள் புத்தளத்தில் இருந்து 2003ஆம் ஆண்டே இங்கு வந்து விட்டோம். ஆயினும் இங்கு வந்து பார்த்த போது நாங்கள் வாழ்ந்து குதூகலித்திருந்த எம்முடைய வீடு தரைமட்டமாக இருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்த போது எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. எனினும் நாங்கள் சோர்ந்து போய்விடவில்லை. யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்தும் இருப்பது என்று தீர்மானித்தோம். எங்களுக்கு உதவி செய்ய மக்கள் பணிமனையினர் முன்வந்தார்கள். சில காலம் மக்கள் பணிமனையிலேயே தங்கியிருந்தோம். அதன் பின்னர் எமது பள்ளியால் நாங்கள் குடியிருக்க ஒரு வீட்டினைத் தந்துதவினார்கள். ஆயினும் அதற்கு மாதாந்தம் 500 ரூபா வாடகையாகக் கட்டியாக வேண்டும். என்னுடைய கணவர் வேறு தொழில்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் கூலி வேலைக்குத் தான் செல்வதுண்டு. அதுவும் ஒழுங்காகக் கிடைப்பதில்லை. அப்படி வேலை கிடைத்தாலும் கூட வேலைக்குத் தகுந்த ஊதியமும் கிடைப்பதில்லை. இதனால் குடும்பச் சுமையைக் குறைப்பதற்காக நான் சாப்பாடு செய்து விற்று வருகின்றேன். மதிய உணவு மற்றும் காலை உணவு தேவைப்படுபவர்கள் என்னிடம் முற்கூட்டியே சொல்லி வைப்பார்கள். ஆயினும் இவ்வாறு சாப்பாடு செய்து கொடுக்கும் வேலை கூட நிரந்தரமானதல்ல. எப்போதாவது தான் கிடைக்கும். நான்கு பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்வதால் அவர்களுக்குரிய செலவீனங்களை ஈடு செய்யவே மிகுந்த கஷ்டப்பட வேண்டியிருக்கின்றது. சமுர்த்தி நிவாரணம் எங்களுக்கு கிடைகின்றது. எனினும் நலிவுற்றோருக்கான பண உதவி நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது நாங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீடு கூட வெகு விரைவில் விற்பனை செய்யப்படவிருக்கின்றது. இதனால் வெகு விரைவில் நாங்கள் இங்கிருந்து வெளியேற்றப்படும் சந்தர்ப்பம் நெருங்கி வருகின்றது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் எமது குடும்பம் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டியிருக்கும். எனவே அவசரமாக நாங்கள் தங்குவதற்கு ஒரு உறைவிடம் தேவை. அதனை யாரிடம் சென்று பெறுவதென்று தெரியால் தவிக்கின்றோம். எம்முடைய பொருளாதார நிலையை உணர்ந்த சர்வோதய நிறுவனம் தொழில் முயற்சிக்காக எமக்கு 20,000 ரூபா தர முன்வந்தது. ஆயினும் எவ்வித காரணங்களும் தெரிவிக்கப்படாமல் அத் தொகை நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டது.

புத்தளத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் எம்முடைய பணத்தையும் போட்டு வீடு ஒன்றைக் கட்டியிருந்தோம். ஆயினும் அங்கு தொழில் வாய்ப்புகள் மிக மிக குறைவு. எனவேதான் யாழ்ப்பாணத்திலேயே நிரந்தரமாகத் தங்கியிருக்கத் தீர்மானித்தோம் எனவே தொழில் ஒன்றை ஆரம்பித்து நாங்கள் முன்னேறுவதற்கும், இன்னமும் அலைந்து திரியாமல் நிம்மதியாக வாழ்வதற்கு வீடு ஒன்றைப் பெற்றுத்தரவும் தொண்டு நிறுவனங்களோ, அதிகாரிகளோ முன்வருவார்களா?

“வடக்கின் வசந்தம்” திட்டம்
வாழ்வு தருமா இவர்களுக்கும் ?

தாரிக் மகமத் சுலைமான் (மீராப்பிள்ளை அவனியூ)

19 வருட அகதி வாழ்க்கையில் நாங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏறக்குறைய உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிப்புற்றவர்களாகவே நாம் இருந்தோம். புத்தளத்தில் நாம் அகதிகளாகத் தங்கியிருந்த இடத்தில் இப்போது தான் வீட்டுத்திட்ட வேலைகள் நடைபெறுகின்றன. அதற்கு முன்னர் தங்குமிடம் சீரின்மையால் மிகுந்த கஷ்டப்பட்டோம். இங்கிருந்து நாங்கள் வெளியேற்றப்பட்ட போது கையிலே வெறும் ஆயிரம் ரூபா மட்டும் தான் இருந்தது. அதை வைத்துக் கொண்டு எத்தனை நாள் தான் வாழ முடியும்.
மீளவும் யாழ்ப்பாணம் வந்தபோது எங்களுடைய வீடுகள் எல்லாம் உடைந்திருந்தன. எம்முடைய வீடுகள் உடைபடுவதற்கு காரணமானவர்கள் இப்போதும் இங்கு இருக்கிறார்கள். மீளவும் குடியமர்ந்துள்ள பல முஸ்லிம் குடும்பங்கள் தங்க இடமின்றித் தவித்து வருகிறார்கள். இது பற்றி அண்மையில் இங்கு வந்திருந்த மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுனியிடமும் தெரிவித்திருக்கிறோம். ஆயினும் அவர் வந்த பின்னர் கூட மக்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. இங்குள்ள அரசாங்கக் காணிகளில் எமக்கு வீடு கட்டித் தருவதாக சொல்லப்பட்டது. ஆயினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கிருந்து இடம்பெயர்ந்து போன 4800 குடும்பங்களில் இதுவரை 192 குடும்பங்களே மீளவும் குடியேறியுள்ளன. அது தவிர இப்போது 8200 குடும்பங்களாக பெருகியும் விட்டனர். அவர்கள் அனைவரும் இங்கு வரும் போது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தங்குமிடப் பிரச்சினை தீவிரமாகி விடும்.எனவே இப்போதே உரியவர்கள் செயலில் இறங்க வேண்டும். 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாங்கள் யாழ்ப்பாணத்தில் எவ்வாறு சந்தோஷமாக வாழ்ந்திருந்தோமோ அந்த நிலை மீண்டும்மலர வேண்டும்.


சுஹைலா (ஆஸ்பத்திரி வீதி)

நாங்கள் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்கு பின்னர் அநுராதபுரத்தில் உள்ள இக்கிரிகொலாவ என்னும் இடத்தில் தங்கியிருந்தோம். அங்கு வாழ்க்கையை நகர்த்திச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டோம். எனவே யாழ்ப்பாணம் வந்து மீண்டும் வீடு கட்டி மகிழ்வாக வாழ நினைத்தோம். நாங்கள் வீடு கட்டுவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுவரை 50,000 ரூபா தந்துள்ளார். ஆயினும் அந்தப் பணம் வீடு கட்டப் போதாதென்பதால் அதனை வங்கியில் வைப்புச் செய்துள்ளோம். இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து பின்னர் அந்த நிதியையும் கொண்டு வீடு கட்டலாம் என எண்ணியுள்ளோம். அராலி வீதியில் உள்ள புதுக்குடியிருப்பில் வீடு கட்டலாம் என எனது கணவர் கூறுகின்றார். ஏனெனில் அங்குள்ள கோயில் காணியில் அதற்குரிய பணத்தைக் கொடுக்காமல் வீட்டினைக் கட்டமுடியும்.

ஆயினும் அப்பகுதியில் நன்னீர் வசதியோ, மின்சார வசதியோ எதுவுமே இல்லை. அத்தகைய வசதிகள் செய்துதரப்படும் போது எம்மைப்போல தங்குமிடம் இன்றி நிர்க்கதியாக நிற்பவர்கள் இப்பகுதியில் குடியிருப்புகளை அமைத்து கொஞ்சமேனும் நிம்மதியாக வாழமுடியும். எனது கணவர் தற்போது இரும்பு வியாபாரம் செய்து வருகின்றார். ஒரு கிலோ இரும்பை 5 ரூபாவுக்கு எடுத்து 8 ரூபாவுக்கு வியாபாரிகளிடம் விற்றுவருகின்றார். இது மட்டும் தான் எமக்குத் தெரிந்த தொழில். எம்முடைய குடும்ப வாழ்க்கை, பிள்ளைகளின் படிப்புச் செலவு என்பனவெல்லாம் இரும்பு வியாபாரத்தை நம்பியே இருக்கின்றன. ஆயினும் தென்னிலங்கைக்கு இரும்புப் பொருள் வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்படுவது தடைசெய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது இதனால் எம்முடைய குடும்ப வருமானம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் இந்தத் தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் மத்தியிலே எழுந்துள்ளது. வேறு ஏதாவது தொழில்கள் செய்ய தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி செய்தால் எம்முடைய வாழ்வு வளம் பெறும்.

முகமத் காலித் (பொம்மை வெளி)

நாங்கள் நீண்ட காலமாக கடற்றொழில் செய்து வருகின்றோம். இப்போது எங்களுக்கு கடற்றொழிலை மீண்டும் செய்வதற்கு எவ்வித உபகரணங்களும் இல்லை. கடலில் மீன் பிடிப்பதற்கான தடை நீக்கப்பட்டிருப்பதால் கடற்றொழிலில் ஈடுபடுவதன் மூலம் அதிக வருவாயை ஈட்ட முடியும். எனவே எங்களுக்கு கடற்றொழில் செய்வதற்குரிய உதவிகள் செய்யப்பட வேண்டும். மேலும் இங்குள்ள முஸ்லிம் பிள்ளைகள் ஒஸ்மானியாக் கல்லூரியில் தான் கல்வி பயின்று வருகிறார்கள். ஆயினும் அக்கல்லூரியில் பல்வேறு வசதியீனங்கள் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்திப்பதன் மூலம் எமது பிள்ளைகளின் கல்விக்கான அடித்தளத்தைப் பலமாக இடமுடியும்.

நன்றி:மீனகம்.
தபால்காரன்.

ஊருக்குத்தான் உபதேசம் உண்மையில் படு மோசம்

மும்பை : "மராத்தி மொழி தான் எங்களது உயிர் மூச்சு' என்று மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.,) தலைவர் ராஜ் தாக்கரே முழங்கினாலும், அவர் கட்சி தலைவர்கள் தங்கள் குடும் பத்தில் உள்ள குழந்தைகளை ஆங்கில பயிற்றுமொழி பள்ளிகளில் தான் சேர்த்துள்ளனர்.




மகாராஷ்டிராவில், மராத்தியர்கள் தான் இருக்க வேண்டும்; மற்ற மொழியினர் வெளியேற வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே பல ஆண்டுக்கு முன்பே கர்ஜித்தார்; அவர் கட்சி இன்னமும் அதில் இருந்து மாறவில்லை.அவரிடம் இருந்து பிரிந்த அவர் சகோதரி மகன் ராஜ் தாக் கரே, எம்.என்.எஸ்., கட்சியை ஆரம்பித்ததில் இருந்து மராத்தியர் கோஷத்தை வைத்து தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 13 இடங் களை அவர் கட்சி கைப் பற்றியது. "சட்டசபையில் மராத்தி மொழியில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும்; இல்லாவிட் டால்...' என்று எச்சரித்திருந்தார். ஆனால், சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி , இந்தியில் பிரமாணம் எடுத்தபோது சபையில் பெரும் ரகளை செய்தது எம்.என்.எஸ்., இப்படி மராத்தி கோஷத்தை ராஜ் தாக்கரே கட்சி போட்டாலும், அவரின் கட்சியை சேர்ந்த புள்ளிகள் என்னவோ, தங்கள் குடும்பத்தினரை ஆங்கில பயிற்று மொழி பள்ளிகளில் தான் படிக்க வைத்து வருகின்றனர்.




எம்.என்.எஸ்.,சின் சட்டசபை கட்சித் தலைவர் பால நந்தோன் கர், தனது மகளை ஆங்கிலப்பள்ளியில் சேர்த்துள்ளார். அவரை கேட்டால்," மராத்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்; பிற மொழிகளுக்கு நாங்கள் எதிரி அல்ல' என்று விளக்கம் சொன் னார். இதே போன்று மாகீம் தொகுதியின் கட்சி எம்.எல்.ஏ., தனது மகனை பி.காம்., பட்டப்படிப் பில் சேர்த்துள்ளார். இவரது மகன் பள்ளிக்கல்வியை அங் குள்ள கான்வென்டில் ஆங்கிலம் வாயிலாக முடித்தவர். கல்யான் புறநகர் எம்.எல்.ஏ., ரமேஷ் பாட்டீல் மூத்த மகன் துபாயில் எம்.பி.ஏ., படித்து வருகிறார். இளைய மகன் மும்பையில் கிறிஸ்தவ பள்ளியில் ஆங்கில மொழி வாயிலாக 6ம் வகுப்பு படித்து வருகிறான். விக்கிரோலி தொகுதி எம்.எல்.ஏ., மங்கீஸ் சாங்கீல் உடைய மூன்றரை வயது மகன் ஆங்கில விளையாட்டு பள்ளியில் படித்து வருகிறான்.




கான்னாட் தொகுதி எம்.எல்.ஏ., ஹர்ஷவர்தன் மகன் அவுரங்காபாத்தில் உள்ள ஆங்கிலப்பள்ளியில் படித்து வருகிறார். இவர்களை தவிர மற்ற எம்.எல்.ஏ.,க்களான பிரவீன் தாரேக்கர், வசந்த் கீதே, சிஷீர் ஷிண்டே, உத்தம் ராவ் தங்களது குழந்தைகளை மராத்தி மொழி வாயிலான கல்வியில் சேர்த் துள்ளனர். "கட்சியினுடைய மராத்தி மொழி கொள்கைக்கும், தலைவர்களின் ஆங்கில மோகத் துக்கும் எவ்வித முரண்பாடும் கிடையாது' என்று கட்சியின் தலைவர்கள் சிலர் கூறினர்.




கட்சி பிரமுகர் யஷ்வந்த் கில்லடார் கூறுகையில், "மராத்தி மொழி வழி கல்வியை பயின்று விட்டு எவராலும் உயர்கல்வியில், குறிப்பாக மருத்துவம், பொறியியல் தொழில்நுட்ப படிப்பில் சிறந்த தேர்ச்சி அடைய முடியாது; அதனால், ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது' என்றார்.

தபால்காரன்.